குட்டியை கவ்விச் சென்ற சிறுத்தை..! துரத்திச் சென்ற தாய்..! வைரல் வீடியோ - சிறுத்தையை துரத்தும் காட்டு பன்றி
Published : Oct 5, 2023, 5:52 PM IST
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில், பெஜலட்டி சாலையில் சிறுத்தை, புலி, யானை, காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகள் அதிக அளவில் உலாவுகின்றன. பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா மலைக்கிராமம் செல்லும் மண் சாலையில், அப்பகுதியில் வசிக்கும் மக்கள், வனத்துறையினர் தினமும் பயணிக்கின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள், ஜீப்பில் தெங்குமரஹாடா செல்லும் வழியில் உள்ள மண் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென காட்டுப்பன்றிகளின் கூட்டம் சாலையைக் கடந்து ஓடின. அப்போது காட்டுப்பன்றிகளை வேகமாக துரத்தி வந்த சிறுத்தை ஒன்று காட்டுப்பன்றியின் குட்டி ஒன்றை கவ்விச் சென்றது.
இதனைக் கண்ட குட்டி காட்டுப்பன்றியின் தாய் ஆத்திரத்தில் சிறுத்தையை துரத்த, ஒரு சிறிய காய்ந்த மரத்தின்மீது சிறுத்தை ஏறியது. அதனை துரத்திச் சென்ற காட்டுப்பன்றியும் மரத்தில் ஏறியதால், மரம் சரிந்து விழுந்தது. இருப்பினும் காட்டுப்பன்றி சிறுத்தையை விடாமல் துரத்தியது.
தெங்குமரஹாடா வனப் பகுதியில் தன் குட்டியை கவ்விச் சென்ற சிறுத்தையை, தாய் காட்டுப்பன்றி துரத்திச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.