video: பசியால் லாரியை வழிமறித்து மக்காச்சோளம் சாப்பிட்ட யானை! - etvbharat tamil
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனப்பகுதியிலிருந்து உணவு, தண்ணீர் தேடி யானைகள் கோவை - மைசூர் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில், தமிழக - கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே மக்காச்சோளம் பாரம் ஏற்றிய லாரி பழுதாகி நின்றது. அப்போது வனத்திலிருந்த வந்த ஒற்றை யானை லாரியில் இருந்து மக்காச்சோள மூட்டைகளை எடுக்க வந்துள்ளது.
யானையை கண்ட ஓட்டுநர் பயத்தில் கீழே இறங்கி ஓடி விட்டார். பின்னர், அந்த யானை லாரியில் இருந்த மக்காச்சோளத்தை ஒவ்வொன்றாக எடுத்துச் சாப்பிட்டது. சாலையின் குறுக்கே நின்ற யானையால் பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சப்தம் போட்டும் ஹாரன் அடித்தும் யானையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஓட்டுநர்கள் முயற்சித்தனர், ஆனால் யானை நகராமல் அதே இடத்தில் நின்றபடி சோளத்தைச் சாப்பிட்டதால் இரு மாநிலங்களிடையே சுமார் 1 மணி நேரமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து கர்நாடக செல்லும் பயணிகள் பேருந்து நீண்ட நேரமாக அணி வகுத்து நின்றன. பின்னர் இது குறித்து ஆசனூர் வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் வந்த வனத்துறை ஊழியர்கள் யானையைக் காட்டுக்குள் விரட்டினர். மேலும் அப்பகுதியில் யானை மீண்டும் வராமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.