மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்ற புதுமண தம்பதிகள்..! வைரலாகும் வீடியோ..! - ஈச்சனாரி கோயில்
Published : Nov 20, 2023, 11:37 AM IST
கோயம்புத்தூர்: அண்மை காலமாக திருமண நிகழ்வுகளில் மணமக்கள் சமூக வலைத்தள டிரெண்டிங்கிற்காக பல்வேறு விதமான, வித்தியாசமாக நிகழ்வுகளை நடத்தி வருவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில், கோவை அருகே திருமணம் முடிந்த புதுமண தம்பதிகள், மாட்டு வண்டியில் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை அடுத்த ஈச்சனாரி பகுதியில் கோயில்களில், நேற்று (நவ.20) முகூர்த்த தினத்தை முன்னிட்டு பல திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த பவதாரணி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
பின்னர் திருமணம் முடித்த புதுமண தம்பதிகள், மாட்டு வண்டியில் அமர்ந்தபடி செட்டிபாளையத்தில் உள்ள மணமகன் ஆனந்த் வீட்டுக்குச் சென்றனர். அப்போது, கல்யாண கோலத்தில் மாட்டு வண்டியில் சென்ற புதுமண தம்பதியினரை, சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பலர் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும், புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் செல்லும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.