திருமண நிகழ்வில் நகைகளைத் திருடிய நபர் கைது.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்! - நகை திருட்டு சம்பவம்
Published : Jan 4, 2024, 1:17 PM IST
கோயம்புத்தூர்: கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி சிங்காநல்லூர் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில், மர்ம நபர் ஒருவர் 5 சவரன் தங்க நகைகளை திருடியதாக திருமண வீட்டார் தரப்பில் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அதில் ஒரு நபர் நகைகளைத் திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. அதனை அடுத்து அந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார், திருட்டில் ஈடுபட்ட நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, போலீசாரின் வழக்கமான ரோந்துப் பணியின்போது, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற நபரிடம் விசாரணை செய்துள்ளனர்.
விசாரணையில், திருமண மண்டபத்தில் நகைகளைத் திருடிய நபர் என்பதும், அவர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்கிற மணி என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், அவர் அடகு வைப்பதற்காக வைத்திருந்த நகைகளை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், தற்போது அந்த நபர் நகைகளைத் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.