வரட்டா..! லாரியை வழிமறித்து கிழங்கு மூட்டையை அலேக்காக தூக்கிச் சென்ற யானை... வைரலாகும் வீடியோ! - லாரியை வழிமறித்து உருளைக்கிழங்கை சாப்பிடும் யானை
Published : Oct 24, 2023, 6:06 PM IST
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் பகுதிகளில் விளையும் காய்கறிகள் தினமும் ஈரோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில், கேர்மாளம் பகுதியிலிருந்து உருளைக்கிழங்கு மூட்டைகள் ஏற்றிக் கொண்டு மேட்டுப்பாளையம் செல்வதற்காக, மினி லாரி ஒன்று திம்பம் மலைப்பகுதியில் அருகே, சீவக்காய் பள்ளம் என்ற பகுதியில் மெதுவாகச் சென்ற கொண்டிருந்தபோது காட்டு யானை ஒன்று மினி லாரியை வழிமறித்தது.
இதனைக்கண்டு அச்சமடைந்த ஓட்டுநர் லாரியை நிறுத்தியுள்ளார். பின்னர் அந்த காட்டு யானை லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த உருளைக்கிழங்கு மூட்டையை தன் தும்பிக்கையால் பறித்தெடுத்து, உருளைக்கிழங்குகளைச் சாப்பிட்ட ஆரம்பித்தது. அப்போது அவ்வழியே வந்த மற்ற வாகன ஓட்டிகள் சத்தம் போட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க முயன்றுள்ளனர்.
பின்னர், அந்த காட்டு யானை உருளைக்கிழங்கு மூட்டையை தன் தும்பிக்கையால் எடுத்துக்கொண்டு வனப்பகுதிக்குச் சென்றது. காட்டு யானை லாரியை மறித்து உருளைக்கிழங்கு மூட்டையை வனப்பகுதிக்குள் எடுத்துச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.