திண்டிவனம் அருகே பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்!
Published : Dec 15, 2023, 7:38 AM IST
விழுப்புரம்: திண்டிவனம் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிக்குப்பம் பகுதியில் இயங்கி வரும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே பேருந்து பயணத்தில் தினசரி பிரச்னை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 13ஆம் தேதி திண்டிவனம் ராஜாஜி சாலையிலுள்ள பிரபல பாத்திரக்கடை முன்பு, மாணவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டுள்ளனர். அதில் ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, சக மாணவர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
நகரின் பிராதான சாலையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை அப்பகுதியில் இருந்தவர்கள் மாணவர்களை கலைந்து செல்ல வைத்துள்ளனர்.
இருப்பினும் சமீப காலமாக, விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகரிப்பதாகவும், மாணவர்களுக்கு மத்தியிலான மோதல் போன்ற சட்ட விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அவற்றைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.