ஊருக்குள் உலா வந்த ஒற்றை காட்டு யானை..! ஆறு மணி நேரம் போராடி விரட்டிய வனத்துறையினர்..!
Published : Oct 11, 2023, 11:03 PM IST
ஈரோடு: ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை ஆறு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்தும் நிகழ்வு தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்று (அக்.11) மாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை அய்யம்பாளையம், சித்தன்குட்டை உள்ளிட்ட கிராமங்களில் நுழைந்து, அப்பகுதியில் பயிரிட்டுள்ள வாழை மரங்களைச் சேதப்படுத்தியது.
காட்டு யானை விளை நிலங்களுக்குள் நடமாடுவதைக் கண்டு அச்சமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்கிடையில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை, தோட்டங்களில் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட வேலிகளைச் சேதப்படுத்தி, தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.
அதனை அடுத்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், ஊர் மக்களுடன் இணைந்து பட்டாசுகளை வெடித்து, சத்தங்களை எழுப்பி 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். பகல் நேரத்தில் காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.