வேலூரில் வங்கி முன்பு அடமான நகை திருட்டு.. கொள்ளையர்கள் தப்பிச்சென்ற சிசிடிவி காட்சி! - ஈடிவி பாரத் தமிழ்
வேலூர்:தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த லோகேஷ் குமார் (30), இவர் தனது சொந்த செலவிற்காக இந்தியன் வங்கியில் நகையை அடமானம் வைக்கச் சென்றுள்ளார். அங்கு நகை மதிப்பீட்டாளரிடம் தான் கொண்டு வந்த 15 சவரன் நகைக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என விசாரித்துள்ளார்.
அதன் பின்பு லோகேஷ் குமார் வங்கியிலிருந்து வெளியில் வந்து தான் கொண்டு வந்த நகை பையை தன்னுடைய இருசக்கர வாகனத்தின் மீது வைத்து விட்டு, தன்னுடைய உறவினர்களிடம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அங்கு திடீரென வந்த 2 நபர்கள் லோகேஷ் குமார் வைத்திருந்த தங்கநகை பையை மின்னல் வேகத்தில் பறித்துக் கொண்டு தாங்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் லோகேஷ் குமார் கூச்சலிடவே அக்கம் பக்கத்திலிருந்த பொதுமக்கள் கொல்லையில் ஈடுபட்டவர்களை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றுள்ளனர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீட்டின் அருகே கொள்ளையர்களின் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கி இருவரும் கீழே விழுந்து அங்கிருந்து ஓடியுள்ளனர். பொதுமக்கள் அவர்களை பின் தொடர்ந்து துரத்தியுள்ளனர்.
கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் துரத்திச் சென்ற பொதுமக்கள் மீது பாட்டில் மற்றும் கற்களைக் கொண்டு தாக்கி அங்கிருந்து அவர்கள் தப்பித்துள்ளனர். பின்னர் லோகேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் வேலூர் தெற்கு போலீசார் கொள்ளை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொல்லையில் ஈடுபட்ட 2 நபர்கள் யார் என்பதைக் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.