விழுப்புரம் பாஜகவில் சலசலப்பு.. தெற்கு மாவட்ட பாஜக தலைவரின் ஆடியோ வைரல்! - வைரல் ஆடியோ
விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக விஏடி கலிவரதன் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தனது கட்சியிலுள்ள பெண் நிர்வாகிளிடம் ஆபாசமாக பேசுவதாகக் கூறப்படும் ஆடியோ வெளியாகி பாஜக தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
இதனால் மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன் நீக்கப்பட்டு, அதன் பிறகு விழுப்புரம் மாவட்ட பாஜகவை வடக்கு மாவட்டம், தெற்கு மாவட்டம் என இரண்டாகப் பிரித்து தெற்கு மாவட்ட பாஜக தலைவராக விஏடி கலிவரதனும், வடக்கு மாவட்ட தலைவராக ஏடி.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், மாவட்ட ஐடி விங்கிற்கு பொறுப்பு நிர்வாகிகள் நியமனம் செய்வதற்காக பாஜக மாவட்ட ஐடி பிரிவு தலைவர் பிரபாகரன் என்பவர் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் விகேடி கலிவரதனுடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது "பாஜகவில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு எதுவும் தெரியாது.
மாநிலப் பொறுப்பு வழங்கப்பட்டால் எப்படி செயல்பட வேண்டும் என்று கூட அவர்களுக்கு தெரியாது" என்பது உள்பட தகாத வார்த்தைகளால் இழிவாக பேசும் செல்போன் உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக நியமிக்கபட்ட கலிவரதனை கட்சி பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென அக்கட்சியின் ஒரு தரப்பு உறுப்பினர்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.