மேளதாளங்களுடன் விநாயகர் சிலைகள் விஜர்சனம்! கோலாகலமாக கொண்டாடிய பொது மக்கள்! - news in tamil
Published : Sep 23, 2023, 9:50 AM IST
நீலகிரி:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 72 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த 72 விநாயகர் சிலைகளை வாகனங்கள் மூலம் சிம்ஸ் பார்க் பகுதிக்கு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டது. அதன் பின் சிம்ஸ் பார்க்கில் இருந்து மேளதாளங்கள் முழங்க முக்கிய சாலையான மவுண்ட் ரோடு வழியாக குன்னூர் சிலைகள் வந்தடைந்தன.
அங்கிருந்து குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி அருகே உள்ள லாஸ் ஃபால்ஸ் பகுதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் லாஸ் பால்ஸ் நீர்வீழ்ச்சியில் சிலைகள் கரைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்காக நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 400 காவல் துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு பல்வேறு அமைப்புகள் தரப்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விநாயகர் சிலைகள் விஜர்சனம் காரனமாக குன்னூரில் முக்கிய சாலைகள் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது. இதனால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.