Ganesh Chaturthi: கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தி விஜர்சனம் ஊர்வலம்.. ஏராளமானோர் பங்கேற்பு! - விநாயகர் சதுர்த்தி விஜர்சனம் ஊர்வலம்
Published : Sep 25, 2023, 7:48 AM IST
திண்டுக்கல்: தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருவிழா விநாயகர் சதுர்த்தி. முக்கியமாக வடமாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகரின் பிறந்த நாளானது, ஆவணி சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பலவிதமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் 3 - 5 நாட்கள் எனவும், சில இடங்களில் 10 நாட்கள் வரையும் மக்கள் கொண்டாடுகின்றனர். இந்நிலையில், மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பலவிதமான அலங்காரங்களில் விநாயகர் சிலைகளை பக்தர்கள் வடிவமைத்து இருந்தனர்.
அப்படி வடிவமைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட சிறிய சிலைகளும், 50க்கும் மேற்பட்ட பெரிய விநாயகர் சிலைகளும் கொடைக்கானல் ஏரி அருகே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலமானது ஏரி பகுதியில் துவங்கி பேருந்து நிலையம், அண்ணாசாலை, மூஞ்சிக்கல் வழியாக சென்று அரசு பள்ளி வரை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அரசு பள்ளி அருகே உள்ள நீரோடையில் விநாயகர் சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக கரைக்கப்பட்டன. பின்ன விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில், எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.