Video: பத்து வருடங்களாக இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு அலையும் கிராம மக்கள்! - கோவை மாவட்ட செய்திகள்
கோவை:கிணத்துக்கடவு தாலுகா, தேவனாம்பாளையம் அருகே உள்ள வகுத்தம்பாளையம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அப்பகுதியில் உள்ள தோட்டங்கள், தேங்காய் நார் கம்பெனிகள் என பிற தொழில்களுக்குச் சென்று வருகின்றனர்.
இவர்கள் வசிக்கும் பகுதியில், 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குக் கடந்த சில வருடங்கள் முன்பு இருக்கும் இடத்திற்கு இலவச வீட்டுமனைப் பட்டா கொடுத்து தமிழக அரசால் தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. அருகில் வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்படவில்லை. தாங்கள் வசிக்கும் இடத்தில் சிமென்ட் ஷீட்டுகள் அமைத்து மக்கள் வசித்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளதால் குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றனர். இது பற்றி பொள்ளாச்சிக்கு கடந்த சில மாதங்கள் முன்பு வந்த, தமிழக முதலமைச்சரிடம் நேரடியாக பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பலமுறை குறுஞ்செய்தி அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், தாசில்தார் என அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. அதிமுக, திமுகவினர் ஓட்டு கேட்டு வந்தால் புறக்கணிப்போம் எனவும்; தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் எனவும் அரசுக்குக் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் பாஜக மீது சீறிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள்!