மாடுகள் கூட சாப்பிட முடியாத நிலையில் ரேஷன் அரிசி? - வைரல் வீடியோ!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே சிங்காரகோட்டையில் பொதுமக்கள் ரேஷன் கடையில் அரிசி வாங்கியுள்ளனர். வீட்டில் வந்து பார்த்தபோது அரிசியில் கலப்படம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் அரிசியை தண்ணீரில் ஊற வைக்கும்போது ரப்பர் போல் கறைவதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதனையடுத்து வேடசந்தூர் பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்க மாட்டோம் என்றும், மாடுகள் கூட சாப்பிட முடியாத அளவு இந்த ரேஷன் அரிசி இருப்பதாகவும், இதே போல் கலப்படமான அரிசியை ரேஷன் கடையில் வழங்கினால் வாகனத்தை பிடித்து வைப்போம் என்றும் பொதுமக்கள் கூறி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், ரேஷன் கடையில் கலப்படம் இல்லாத சுத்தமான அரிசி வருகிறதா என்பதை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல், சமீபத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பெயரில் ரேஷன் கடைகளில் அரிசி விற்பனை செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.