PS2 காட்சிகளில் மாற்றமா? - சுஹாசினி விளக்கம்; விஜய்சேதுபதியின் கியூட் பதில்!
சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல், இன்று (ஏப்ரல் 30) சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தத் தேர்தலே, தமிழ் சினிமா சங்கங்களில் பெரிதும் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகும் ஒன்றாக கவனிக்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலின் மூலம் தலைவர், 2 துணைத் தலைவர், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்படி, இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் தங்களது வாக்கினை செலுத்தினர்.
வாக்கினை செலுத்திவிட்டு வந்த சுஹாசினி மணிரத்னம், ''பொன்னியின் செல்வன் படத்தின் விமர்சனம் தனிப்பட்ட நபரைப் பொருத்தது'' எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து முந்தைய தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடு குறித்த கேள்விக்குப் பதில் அளித்த நடிகர் விஜய்சேதுபதி, “என்னுடைய ஓட்டை செலுத்தி உள்ளேன். அதுபோதும் என நினைக்கிறேன்” எனக் கூறினார்.
மேலும், இந்தத் தேர்தலில் முரளி மற்றும் மன்னன் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இதன் முடிவுகள் இன்று மாலையே எண்ணப்பட்டு வெளியாக வாய்ப்புள்ளது.
TAGGED:
முரளி ராமநாராயணன்