உடலில் பச்சை குத்தி லியோவின் ஃபர்ஸ்ட் லுக் கொண்டாட்டம்! - லோகேஷ் கனகராஜ்
திருநெல்வேலி: நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் லியோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதை வரவேற்கும் வகையில் நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய்யின் பிறந்த நாளையொட்டி இந்தப் படத்தில் இடம்பெறும் ’நான் ரெடி’ என்ற பாடல் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியானது.
மேலும், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் விஜயின் பிறந்த தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு கொண்டாட்டங்களையும் கொண்டாடும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை நடிகர் விஜயின் ரசிகர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அதன்படி நடிகர் விஜய் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கில் நடிகர் விஜய் நடித்து வெளியான படப் பாடல்கள் மற்றும் திரைப்பட சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவில் லியோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் திரையரங்கில் பிரமாண்ட திரையில் வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விஜய் ரசிகர்கள் கேக் வெட்டி விஜய் பிறந்த நாளையும் லியோ பட போஸ்டர் வெளியீட்டையும் ஒரு சேர கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் தங்கள் உடலில் விஜய் முகத்தை பச்சை குத்தி வந்திருந்தனர். உடலில் பச்சை குத்திக் கொண்டும் கேக் வெட்டியும் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கண்டு ரசித்த நடிகர் விஜய் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.