Leo celebration: தேங்காய் உடைத்து தெறிக்க விட்ட விஜய் ரசிகர்கள்! - லியோ ரிலீஸ்
Published : Oct 19, 2023, 10:59 AM IST
கோயம்புத்தூர்:விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லியோ திரைப்படம் இன்று (அக்-19) காலை திரையரங்குகளில் வெளியானது. கடந்த வாரம் வெளியான இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், ட்ரெய்லரில் நடிகர் விஜய் ஆபாச வார்த்தை பேசுவது போன்ற காட்சி ஒன்று இடம் பெற்றிருந்ததால் சர்ச்சை வெடித்தது.
இதற்கிடையே, லியோ சிறப்புக் காட்சி தொடர்பாக பிரச்னை நீடித்து வந்தது. தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. தமிழகத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என தெரிவித்த நிலையில், முதல் காட்சி இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.
இந்த நிலையில், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி சோமனூர் சாலையில் உள்ள சவிதா திரையரங்கு முன்பு அதிகாலையே குவிந்த விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், விஜய் பேனர்களுக்கு மாலை அணிவித்தும், பால் அபிஷேகம் செய்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேளதாளம் முழங்க குத்தாட்டம் போட்ட ரசிகர்கள், சாலையில் நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து விஜய் ரசிகர்கள் கூறும்போது, “தமிழகம் தவிர பிற மாநிலங்களில் 4 மணி காட்சி வெளியானது துரதிர்ஷ்டவசமானது. எந்த திரைப்படத்துக்கும் இது போன்ற தடைகள் ஏற்பட்டது இல்லை.
லியோ திரைப்படத்துக்கு 4 மணி காட்சிக்கு அனுமதி அளித்திருந்தால் பள்ளி செல்லும் குழந்தைகள், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட்டங்களை முடித்திருப்போம். இப்போதும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டோம்.
திரைப்படத்தை வாழ்த்தி பேனர் வைக்க போலீஸ் அனுமதி மறுக்கின்றனர். ஆனால் திமுக, அதிமுக, பாஜக போன்ற அரசியல் இயக்கங்கள் பேனர்கள் வைக்க மட்டும் அனுமதி அளிக்கப்படுவது எப்படி என தெரியவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே இது போன்ற தடைகளைச் சந்தித்து வருகிறோம்” என தெரிவித்தனர்.