“நீ ஏன் போற.. உன்ன யார் கூப்பிட்டா?” ஒப்பாரி வைத்து அழுத மூதாட்டி!
Published : Dec 29, 2023, 8:39 PM IST
கரூர்: திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் நேற்று (டிச.28) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறப்பு ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சென்னை தீவுத்திடலில் இன்று (டிச.29) விஜயகாந்த் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் இன்று (டிச.29) பிற்பகல் 3 மணியளவில் தீவுத்திடலில் இருந்து புறப்பட்டு, பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகம் வந்தடைந்தது. தொடர்ந்து 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் இறுதிச் சடங்கானது நடைபெற்றது. இதற்காக தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கரூர் மாவட்ட வெள்ளியணை பகுதியில் தேமுதிக சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் விஜயகாந்த் உருவப் படத்தை வைத்து முன்னாள் தேமுதிக ஒன்றியச் செயலாளர் வேங்கை வேலுசாமி மற்றும் தாந்தோணி, கிழக்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ் தலைமையில் கண்ணீர் அஞ்சலி பேனர்கள் வைக்கப்பட்டு, பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விஜயகாந்த் புகைப்படம் முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த பாப்பம்மாள் (85) என்ற மூதாட்டி, கண்ணீர் வடித்து ஒப்பாரி வைத்து அழுதார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.