என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான்.. சேற்றில் சிக்கிய யானைக்கு உதவி செய்த மற்றொரு யானை - ஈரோடு மாவட்ட செய்தி
ஈரோடு: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனப்பகுதியில் குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் ஆசனூர் வனப்பகுதியில் உள்ள யானைகள் தீவனம், தண்ணீர் தேடி அலைகின்றன.
இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் சேறும், சகதியுமாக உள்ள அரேப்பாளையம் குட்டையில் தண்ணீரை குடிக்க யானைகள் வந்தன. அதில் இரு யானைகள் குட்டையின் நடுப்பகுதியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது ஒரு யானை சேற்றில் சிக்கிக் கொண்டது. இதனால் யானை அதே இடத்தில் நகர முடியாமல் தவித்தது.
அப்போது உடனிருந்த மற்றொரு ஆண் யானை, தும்பிக்கையால் தள்ளி மேலே செல்ல உதவியது. ஆனால் யானையின் கால்கள் சேறில் சிக்கியதால் அது நகர்ந்து செல்ல முடியாமல் அதே இடத்தில் நின்றது. பக்கத்தில் இருந்த யானை மீண்டும் அதன் தும்பிக்கையால் சேற்றில் சிக்கிய யானையை மீட்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனால் கோபமுற்ற யானை நீண்ட நேரமாக பிளிறியது. பல மணி நேர போராட்டத்துக்குப் பின் சேற்றில் சிக்கிய யானையை தனது தந்தத்தால் அதன் பின் பகுதியில் பலமாக குத்தியபடி வேகமாக தள்ளியது. இதில் யானையின் கால்கள் சேற்றில் இருந்து விடுபட்டு மெல்ல மெல்ல நகர்ந்து மேலே ஏறியது.
குட்டையில் இருந்து மேலே ஏறும் வரை உதவிகரமாக செயல்பட்ட மற்றொரு யானையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதால், அது வைரல் ஆகி வருகிறது.
இதையும் படிங்க: கரும்பு சாப்பிட வந்த 'கருப்பன்' யானை.. கபக் என பிடித்த வனத்துறை.. 4 மாத ஆபரேஷன் முடிவுக்கு வந்தது எப்படி?