அந்த மனசு தான் சார் கடவுள்... சாலை ஓரமாக உயிருக்குப் போராடிய குருவியைக் காப்பாற்றிய காவலர்கள், குவியும் பாராட்டுகள்! - சாலை ஓரமாக உயிருக்கு போராடிய குருவி
வேலூர்: உயிர் என்றால் மனிதர்கள் ஆனாலும் விலங்குகள் ஆனாலும் ஒன்றுதான். அந்த வகையில் மனிதநேயம் என்ற சொல்லின் அர்த்தத்தை உறுதிபட விளக்கியுள்ளனர், இரு காவலர்கள். இவர்களின் செயல் சிறிதாக இருந்தாலும் தக்க சமயத்தில் உயிருக்குப் போராடிய குருவியை மீட்டுக் காப்பாற்றியது பொது மக்கள் அனைவரிடத்திலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கணியம்பாடி அருகே வேலூர் தாலூகா போலீசார் வேப்பம்பட்டு கிராமத்தில் வழக்கம் போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் விஜய் மற்றும் சந்திரமோகன் ஆகிய இருவரும் சாலை ஓரம் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் குருவி ஒன்று உயிருக்குப் போராடி கொண்டு இருந்ததைப் பார்த்துள்ளனர்.
உடனே அந்த குருவியை மீட்டு காவல் துறையினர் அதற்குத் தண்ணீர் கொடுத்துள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக குருவி உயிர் பிழைத்து மகிழ்ச்சியுடன் பறந்து சென்றது. இதனைப் பார்த்த பொதுமக்கள் போலீசாரைப் பாராட்டினர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் பறவைகளின் பல்வேறு இனங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதனால் அதனைக் காக்க நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும், இது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாக். ட்ரோன்: சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்