Video - குழாயைத் திறந்து தண்ணீர் குடித்த காட்டு யானை! - பண்ணாரி வனப்பகுதி
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. சமீப காலமாக இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள், வனப்பகுதிக்கு அருகில் இருக்கக்கூடிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில், புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
இதற்கிடையே இன்று (ஜூலை 23) அதிகாலை பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து புதுக்குய்யனூர் பகுதிக்கு வந்தது. அப்பகுதியில் உள்ள பழனிச்சாமி என்பவரது வீட்டின் முன்புறம் சென்று, அங்கு பொருத்தப்பட்டிருந்த பைப்லைன் குழாயை தனது தும்பிக்கையால் திறந்து தண்ணீர் குடித்தது.
குழாயின் விளிம்பை தும்பிக்கையுனுள் நுழைத்து, தனது தாகத்தை தீர்த்துக்கொள்ள தண்ணீரை குடித்த காட்டு யானை, தனது தாகம் தணிந்த பின்னர் மீண்டும் வனப்பகுதியை நோக்கி சென்றது. யானை தண்ணீர் குடிக்கும் காட்சியை அருகில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.