போதையில் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதம்... ஆபாசமாக பேசியதை வீடியோ எடுத்ததும் அடங்கிய குடிமகன்! - பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை: பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு பகுதியில் விதிமுறைகளை மீறிச் செல்லும் வாகனங்கள் மற்றும் மது போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களை போக்குவரத்து போலீசார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமாக வந்த கார் ஒன்றை போக்குவரத்து போலீசார் நிற்கச் சொல்லியபோது அந்த காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விரட்டிச் சென்று நெற்குன்றம் பகுதியில் காரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் காரில் இருந்து இறங்கிய நபரிடம் விசாரித்த போது அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து காரை ஓட்டி வந்த நபருக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து போலீசாரை ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அந்த போதை ஆசாமி.
இதையடுத்து இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த நிலையில் பின்னால் இருந்த ஒருவர் தனது செல்போனில் இச்சம்பவத்தைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார். இதனை அறிந்து கொண்ட அந்த போதை ஆசாமி திடீரென மரியாதையாக பேச ஆரம்பித்து உள்ளார்.
பின்னர் குடிபோதையில் காரை ஓட்டி வந்த அந்த நபரின் வாகனத்திற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தனர். மேலும் இந்த வீடியோ காட்சிகள் சமூகவளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.