வேலூர் ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலய பிரதோஷம்; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!
வேலூர்:கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நேற்று (ஆகஸ்ட் 13) பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. மேலும் அருகம்புல் மற்றும் வில்வ இலைகளைக் கொண்டு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீப ஆராதனைகளும் நடத்தப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த சிறப்பு பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு “அரோகரா” என்ற முழக்கங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். மேலும், பிரதோஷத்தையொட்டி கோட்டைக்குள் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் பலர் கோட்டையில் உள்ள பூங்காவில் அமர்ந்து பொழுது போக்கினர்.
விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. ஏராளமான பக்தர்கள் வருகையால் கோயில் வளாகம் மற்றும் கோட்டை பூங்கா சற்று பரபரப்பாகக் காணப்பட்டது. இதையொட்டி ஏராளமான போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.