செய்யாத தவறுக்காக எந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டோம்: வேலூர் சரக டிஐஜி முத்துசாமி உறுதி
Published : Nov 3, 2023, 11:11 PM IST
வேலூர்: தனியார் பல்கலைக்கழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான பாராட்டுவிழா இன்று (நவ.3) நடந்தது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக டிஐஜி முத்துசாமி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசும் போது, "புண்ணியம் செய்தவர்கள் தான் ஆசிரியராக முடியும். பொறாமை இல்லாதவர்கள் பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்த அளவுக்கு புனிதமான பணி ஆசிரியர் பணி. உங்களுக்கு சமூக கடமை உள்ளது நீங்கள் 2ஆம் பெற்றோர்கள்.
சரியான நேரத்தில் மாணவர்களை கண்டிக்க தயங்க கூடாது. எங்கே ஆசிரியர்கள் மாணவர்கள் மீது உண்மையான அன்பை வைத்துள்ளார்களோ அதுதான் சிறந்த பள்ளி. ஒவ்வொரு ஆசிரியரும் மாணவனின் இதயத்தை தொட முடியும். ஏழ்மை நிரந்தரமானது இல்லை என்பதை மாணவர்களிடம் ஆசிரியர்கள் சொல்ல வேண்டும். வேலூர் சரகத்தில், செய்யாத தவறுக்காக எந்த ஒரு ஆசிரியரும் கண்டிக்கப்படவோ, தண்டிக்கப்படவோ மாட்டார்கள் என உறுதி அளிக்கிறேன்" என்று பேசினார்.