தமிழ்நாடு

tamil nadu

விசிக நிர்வாகிகள் புறக்கணிப்பு

ETV Bharat / videos

அரசு விழாவில் விசிக நிர்வாகிகளை புறக்கணித்த அதிகாரிகள் - அழைத்து குத்து விளக்கு ஏற்ற வைத்த தருமபுரி எம்.பி. - விசிக நிர்வாகிகள் புறக்கணிப்பு

By

Published : May 11, 2023, 8:04 PM IST

தருமபுரி:கடத்தூர் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகம் 3 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா இன்று ( மே 11 ) நடைபெற்றது. புதிய கட்டடம் திறப்பு விழாவிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பேரூராட்சி துணைத் தலைவரை அழைக்கவில்லை எனக் கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதிய அலுவலக வளாகத்திலேயே காத்திருந்தனர். 

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமாரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சென்னகிருஷ்ணன் முறையிட்டார். துணைத் தலைவரை அலுவலகத் திறப்பு விழாவிற்கு பிடிஓ அழைக்கவில்லை என்றும்; மற்றவர்களை மட்டும் அழைத்தார்கள் எனவும்; விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவரை புறக்கணிக்கிறார்கள் என எம்.பி. செந்தில்குமாரிடம் முறையிட்டனர். 

இதனைக் கேள்விப்பட்ட தருமபுரி எம்.பி. செந்தில் குமார், கடத்தூர் பேரூராட்சி ஐந்தாவது வார்டு கவுன்சிலரும் பேரூராட்சி துணைத் தலைவருமான தீர்த்தகிரி என்கின்ற வினோத் என்பவரது, தோள் மீது கை போட்டு அழைத்துச் சென்று, தனக்கு அருகிலேயே உட்கார வைத்து குத்து விளக்கு ஏற்ற வைத்து, அலுவலகத்தை தொடங்கி வைத்தார். 

பின்னர் இது குறித்து அவர் கூறுகையில், “திராவிட மாடல் அரசு அனைவருக்கும் பொதுவான அரசு. இதில் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள், கட்சி பாகுபாடு,சாதிப் பாகுபாடு கிடையாது. அதிகாரிகள் இதில் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'கிரவுண்ட்க்கு வெளியே உட்கார்ந்து நிறைய கமெண்ட் அடிக்கலாம்... ஆனால்' - KGF ஸ்டைலில் டிஆர்பி ராஜா பேட்டி

ABOUT THE AUTHOR

...view details