குடும்ப மேன்மைக்காக வரலட்சுமி விரதம்.. தஞ்சை பெண்கள் வழிபாடு! - தஞ்சாவூர் மாவட்ட செய்தி
Published : Aug 25, 2023, 10:55 PM IST
தஞ்சாவூர்:ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை அன்று, வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. கன்னிப்பெண்கள் மற்றும் சுமங்கலிப் பெண்களால் மேற்கொள்ளப்படும் இவ்விரதம் குடும்ப மேன்மையை முன்னிறுத்திக் கொண்டாடப்படுகிறது. இன்று வரலட்சுமி விரதம் தமிழ்நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இந்த வரலட்சுமி விரதத்தில், வாழைக் கன்றுகள் வைத்து, கலசத்தில், அரிசி அல்லது தண்ணீர் நிரப்பி, கலச மேற்பகுதியில் மாவிலை, தேங்காய் வைத்து, கலசத்தின் ஒரு பகுதியில் லட்சுமியின் உருவம் வைத்து அலங்கரித்தனர்.
மேலும் வீட்டில் மாவிலை மற்றும் தென்னை தோரணங்கள் கட்டி பல்வகை பழங்கள், சர்க்கரைப் பொங்கலுடன், மங்கலப் பொருட்களான மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு உதிரி மலர்கள் வைத்து குடும்ப மேன்மையை முன்வைத்து பூஜைகள் செய்தனர்.
மேலும் இப்பூஜையில் பங்கேற்க வருகை தந்த சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப் பெண்களுக்கு, கையில் மஞ்சள் காப்பு கயிறு கட்டி, அவர்களுக்கு மங்கலப் பொருட்களை வழங்கி வரலட்சுமி விரதத்தினை கும்பகோணத்தில் பெரும்பாலான வீடுகளில் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.