அலப்பறை கிளப்பிய காளை.. அரண்டு ஓடிய வீரர்கள்.. வைரல் வீடியோ! - புதுக்கோட்டை செய்திகள்
Published : Jan 18, 2024, 9:31 PM IST
|Updated : Jan 18, 2024, 11:05 PM IST
புதுக்கோட்டை:தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாகவும், அதிக வாடி வாசல்களைக் கொண்ட மாவட்டமாகவும் புதுக்கோட்டை மாவட்டம் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 6ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஜல்லிக்கட்டு போட்டியாகப் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வன்னியன் விடுதி கிராமத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர், மாயன் பெருமாள் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று (ஜன.18) வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 594 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக களம் இறக்கப்பட்டது. இதனைக் களத்தில் இருந்த 234 மாடு பிடி வீரர்கள் சுழற்சி முறையில் களம் இறங்கி மாடுகளை அடக்கிய காட்சிகளும் அடக்க முயன்ற காட்சிகளும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது.
இதற்கிடையில் அவிழ்துவிடப்பட்ட காளை ஒன்று கட்டுக்கடங்காமல் கூட்டத்தில் உள்ள அனைவரையும் மிரளவைத்தது. பலரும் காளை பயந்து அங்கும் இங்குமாய் ஓடிக் கொண்டு இருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் அருகில் உள்ள மரத்தின் மீது ஏறினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.