கடை முன்பு மது அருந்தியவர்களை தட்டிக் கேட்ட உரிமையாளர்.. பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்களுக்கு வலைவீச்சு! - மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட உரிமையாளர்
Published : Nov 14, 2023, 1:58 PM IST
திருப்பத்தூர்:வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகரைச் சேர்ந்தவர் சவுக்கத் அலி. இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு இரண்டு இளைஞர்கள் சவுக்கத் அலியின் சூப்பர் மார்க்கெட் முன்பு அமர்ந்து மதுபானம் அருந்தி கொண்டிருந்துள்ளனர்.
அப்பொழுது, சவுக்கத் அலி இளைஞர்களை கடையின் முன்பு மது அருந்தக் கூடாது என தட்டிக் கேட்டு, இளைஞர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இரண்டு இளைஞர்களும் அங்கிருந்த சென்று, பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு சூப்பர் மார்க்கெட் கடையின் முன் வந்து, மது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி, சூப்பர் மார்க்கெட் கடையின் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர், இது குறித்து சவுக்கத் அலி வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வாணியம்பாடி நகர காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, சூப்பர் மார்க்கெட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசிய இரண்டு இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.