பணியாளர்களை ஏற்றி செல்லும் வாகனத்தில் திடீர் தீ! - சாலையில் திடீரென தீ விபத்து
காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்குத் தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேலைக்குச் செல்லும் ஆட்களை ராஜலட்சுமி டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் வேனில் அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் வாகனம் மூன்று நாட்களுக்கு முன்பு பழுதான நிலையில், கிஷ்கிந்தா சாலையில் உள்ள சர்வீஸ் சென்டரில் வாகனத்தை சரி செய்வதற்காகக் கொடுத்திருந்துள்ளனர்.
அதன்பின் இன்று(ஜூலை 06) வாகனம் சரி செய்யப்பட்டு சர்வீஸ் சென்டரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் எடுத்துச் செல்வதற்காக ஓட்டுநர் பார்த்திபன் என்பவர் வாகனத்தை கிஸ்கிந்தா சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத சமயத்தில் திடீரென வாகனத்தின் முன்பக்கத்திலிருந்து புகை வருவதைக் கண்ட ஓட்டுநர் பார்த்திபன் வண்டியை நிருத்தியுள்ளார். வண்டியிலிருந்து அவர் இறங்கியவுடன் புகை நெருப்பாக மாறி மளமளவென எரியத் துவங்கியது.
இதில் இருக்கைகள் மற்றும் வாகனம் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இந்நிலையில் பொதுமக்கள் தண்ணீர் மூலம் தீயை அணைக்க முயன்றும் முடியாததால் தாம்பரம் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இச்சம்பவத்தால் தாம்பரம்-கிஷ்கிந்தா சாலையில், இரு பகுதியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்ற விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.