வைகுண்ட ஏகாதசி: ராணிபேட்டையில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்பு - 108 திவ்ய தேசம்
Published : Dec 23, 2023, 10:45 AM IST
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலானது 108 திவ்ய தேசங்களில் 107வது திவ்யதேசமாக விளங்கி வருகிறது. இந்த கோயிலில் பெருமாளை வைகுண்ட ஏகாதசி (vaikunta ekadasi sorgavasal thirappu) அன்று தரிசனம் செய்தால் கடன் சுமைகள் நீங்கி செல்வ, செழிப்புகள் பெருகும் என்பது ஐதீகம்.
எனவே, வைகுண்ட ஏகாதசியான இன்று (டிச.23) அதிகாலை நான்கு மணி அளவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு 'கோவிந்தா..கோவிந்தா..' என்ற பக்தர்களின் கோஷத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வை காண்பதற்காக உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். பல்வேறு அலங்காரங்களுடன் காட்சியளித்த பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதுமாக வரிசையில் காத்திருந்து 'கோவிந்தா..நாராயணா..' என பக்தி கோஷங்கள் எழுப்பியபடி தரிசனம் செய்தனர்.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வை காண்பதற்காக வரக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏடிஎஸ்பி தலைமையிலான ஐந்து ஆய்வாளர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் போக்குவரத்து வசதிக்காக சிறப்பு பேருந்து சேவையும், போக்குவரத்து கழகம் மூலம் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.