திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்! - Thiruvannamalai district
Published : Dec 23, 2023, 5:53 PM IST
திருவண்ணாமலை:தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பல வைணவக் கோயில்களில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். ஆனால் அவை எல்லாவற்றையும் விட, மார்கழி மாதத்தில் 20 நாட்களில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதன்படி, தமிழகத்தில் பல்வேறு வைணவக் கோயில்களில், இன்று வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு “சொர்க்கவாசல்” திறக்கப்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் ஸ்தலமாகவும் விளங்கக் கூடியது திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில். இந்த கோயிலில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின் கோயிலில் உள்ள வேணுகோபால் சமேத பாமா ருக்குமணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, கோயிலில் சரியாக அதிகாலை 5.18 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனை காண கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கங்கள் எழுப்பி சாமி வழிபாடு செய்தனர். சிவன் கோயில்களில் வேணுகோபால் சுவாமி இருப்பது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.