முதலமைச்சர் பயோபிக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வேண்டும் - வடிவேலு - Madurai CM MK Stalin Photo exhibition
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டத்தின் திருப்பாலை மேனேந்தல் பகுதியில், முதலமைச்சரின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் வகையில் புகைப்படக் கண்காட்சி தொடங்கி உள்ளது. இந்த புகைப்படக் கண்காட்சியை திரைப்பட நடிகர் வடிவேலு இன்று (மார்ச் 19) பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வடிவேலு, “தமிழ்நாட்டின் அருமைத் தலைவர், மு.க.ஸ்டாலின். அவருடைய புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தது எனக்குப் பெருமை. இங்கே உள்ளவை வெறும் படங்கள் இல்லை. அனைத்துமே உண்மை. முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன்.
மிசா காலத்தில் சிறைவாசம் இருந்ததை தத்ரூபமாக வைத்துள்ளனர். முதலமைச்சரின் வாழ்க்கைப் பயணம் குறித்த கதையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வேண்டும். ஆனால், உதயநிதி ஸ்டாலின் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இருப்பினும், முதலமைச்சர் ஸ்டாலினின் கதையில் உதயநிதி ஸ்டாலினை கட்டாயப்படுத்தி நடிக்க வைப்போம். எனது அரசியல் பயணத்திற்கு காலம் பதில் சொல்லும். நான் இங்கு அரசியல்வாதியாக வரவில்லை” என கூறினார்.