Video: உபியில் வெள்ளத்தில் தத்தளித்த பேருந்து; 40 பயணிகளில் கதி என்ன?
பிஜ்னோர் (உத்தர பிரதேசம்):உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஹரித்வார் செல்லும் சாலையில் கோட்வாலி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 40 பயணிகளுடன் சிக்கிய பேருந்து சிக்கியது. பின்னர், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் கனரக வாகனத்தின் உதவியுடன் பேருந்தினுள் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர். இது குறித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீபகாலமாக கனமழை பெய்து வருகிறது. ஆங்கே வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலம், பஜ்னூர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, 40-க்கு மேற்பட்ட பயணிகளுடன் இன்று (ஜூலை 22) இந்த ஆற்றை கடக்க முயன்ற பேருந்து ஒன்று உத்தரப்பிரதேசம்-உத்தரகாண்ட் எல்லையின் நடுவே வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது.
இதனையடுத்து பேருந்தினுள் இருந்த பயணிகள் அலறியடித்தப்படி பேருந்தின் மீது ஏறி நின்று கூச்சலிட ஆரம்பித்தனர். பின்னர் இது தொடர்பாக, தகவலறிந்த மண்டவாலி போலீசார் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினரின் உதவியோடு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கனரக வாகனத்தின் உதவியுடன் பல மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். மீட்புப் பணி உடனடியாக தொடங்கப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பேருந்து கவிழ்ந்து விழாமல் இருக்க, பாலத்தில் கிரேன் பொருத்தப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், ஆற்றின் வலுவான நீரோட்டம் மீட்புக் குழுவினருக்கு பெரும் சவாலாக இருந்தது.
அம்மாநிலத்தில் பெய்து வரும் கனமழையினால் கிட்டத்தட்ட 13 மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு பிஜ்னோர், ஆக்ரா, படவுன், ஷாம்லி, மீரட், காசியாபாத், முசாபர்நகர், மத்யுரா, சஹாரன்பூர் மற்றும் பிற பகுதிகளில் இருந்து சுமார் 46ஆயிரத்து 830 பேர் வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அம்மாநிலத்தில் இந்த கனமழை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.