"க்யூ ஆர் கோடு மூலம் நொடியில் டிக்கெட்" - ரயில் பயணிகள் வரவேற்பு! - QR குறியீடு மூலம் பயணச்சீட்டு எடுக்கும் வசதி
மதுரை:க்யூ ஆர் குறியீடு மூலம் முன்பதிவு இல்லா பயணச்சீட்டுகளை செயலி மூலம் பெறுவது குறித்து மதுரை கோட்ட ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ரயில் நிலையத்திலிருந்து QR குறியீடு மூலம் பயணச்சீட்டு எடுக்கும் வசதி அனுமதிக்கப்பட்ட பின்பு முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு முறை (UTS) பயணிகளுக்கு எளிதாக மாறி உள்ளது.
ரயில் பயணிகளிடையே இந்த வசதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலான நேரத்தில், சாரண சாரணியர்களின் ஆதரவுடன் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட்டது. அப்போது, செயலி மூலம் பயணச்சீட்டு பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் ரயில் நிலையத்தின் முன்பதிவில்லா பயணச்சீட்டு மையத்தில் பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.
மேலும் QR குறியீடு அடிப்படையிலான பதிவு முறை அறிமுகப்படுத்திய பின்பு, செயலி அடிப்படையிலான பயணச்சீட்டு விநியோகம் பயனர்களுக்கு மிகவும் ஏற்றதாகவும், எளிதாகவும் மாறியது குறித்து பயணிகளுக்கு எடுத்து கூறப்பட்டது. இதற்கு முன், UTS செயலியைப் பயன்படுத்தி ரயில் நிலையத்திலிருந்து 20 மீட்டருக்கு அப்பாலும், 5 கி.மீ சுற்றளவுக்கு உள்ளும் மட்டுமே டிக்கெட் எடுக்க அனுமதிக்கப்பட்டது.
ஆனால் தற்போது 20 கிலோ மீட்டர் சுற்றளவு வரை முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பெற நீட்டிக்கப்பட்டு உள்ளது. மதுரை கோட்டத்தில் உள்ள 111 ரயில் நிலையங்களில், QR குறியீட்டைப் பயன்படுத்தி முன்பதிவில்லா பயணச்சீட்டு வசதி கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதர பிற ஹால்ட் ஏஜெண்டுகள் மூலம் பயணச்சீட்டு வழங்கப்படும் ரயில் நிலையங்களுக்கு QR குறியீடு முன்பதிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், தெற்கு ரயில்வேயின் அனைத்து கோட்டங்களிலும் இந்த வசதி உள்ளது என்றும் மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்து உள்ளது.