புஞ்சை புளியம்பட்டி ஐயப்பன் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தரிசனம்!
Published : Dec 24, 2023, 3:13 PM IST
ஈரோடு:ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானி சாகர் பகுதியில் இன்று (டிச.24) நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வருகை தந்தார். அவர் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து இருந்ததால் கருப்பு நிற சட்டை அணிந்திருந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் வேண்டுகோளின்படி புஞ்சை புளியம்பட்டி தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18 படிகள் இருப்பது போன்று, இந்த கோயிலிலும் 18 படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், வருடத்திற்கு ஒருமுறை மார்கழி மாதம் 18ம் படி திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று படி திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பதினெட்டாம் படி ஏறி ஐயப்பனைத் தரிசித்தனர். இதனிடையே ஐயப்பன் கோயிலுக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குருசாமி காலில் விழுந்து வணங்கினர்.
அதனைத் தொடர்ந்து, சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷத்தோடு குருசாமியுடன் இணைந்து ஒவ்வொரு படியாக வணங்கிப் படியேறி, தர்ம சாஸ்தா ஐயப்பனைத் தரிசனம் செய்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குருசாமி காலில் விழுந்து வணங்கி, பதினெட்டாம் படி ஏறி ஐயப்பனைத் தரிசித்த காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.