viral video: கைக் கடிகாரங்களை பட்டப்பகலில் திருடிச்சென்ற இரண்டு இளைஞர்கள்! - திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை: தண்டராம்பட்டு சாலை கோரிமேடு 5வது தெருவில் வசிப்பவர், முஹம்மத். இவர் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் கடந்த 13ஆண்டுகளாக யாஸ் டைம்ஸ் அண்டு கிஃப்ட் கடை நடத்தி வருகிறார்.
இந்தக் கடையில் சுவர் கடிகாரம், கைக் கடிகாரம், குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டுப் பொருட்கள், ஓவியங்கள், தேநீர் குவளைகள் உள்ளிட்டப் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை கடையின் உரிமையாளரான முஹம்மத் உணவு அருந்துவதற்காக கடையிலிருந்து வெளியே சென்று உள்ளார். இதனை கண்காணித்த இரண்டு இளைஞர்கள் கடைக்கு வந்து லாபகரமாக கடையின் உள்ளே இருந்த மரப்பெட்டியைத் திறந்து அதன் உள்ளே இருந்து விலை உயர்ந்த ஐந்து கைக் கடிகாரங்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
குறிப்பாக இவரது கடையின் எதிரே இரண்டு இளைஞர்கள் சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நின்றிருந்ததாகவும், அதன் பிறகு இரண்டு இளைஞர்கள் கடைக்கு வந்து கை கடிகாரங்களைத் திருடிச் சென்றதாகவும் கடையின் உரிமையாளர் தகவல் தெரிவித்தார். மேலும் பட்டப்பகலில் கடையின் மரப்பெட்டியை திறந்து இரண்டு இளைஞர்கள் விலை உயர்ந்த கைக் கடிகாரங்களை திருடிச் செல்லும் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இரண்டு இளைஞர்கள் பட்டப் பகலில் கடையில் நுழைந்து கைக் கடிகாரங்களை திருடிச் சென்ற சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.