ராணிப்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் 2 பெண்கள் பலி!
ராணிப்பேட்டை:தக்கோலம் பகுதியைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 7 பேர் நேற்றைய தினம் சுங்குவார்சத்திரம் பகுதியில் நடைபெற்ற வாரச்சந்தையில் பொருட்களை விற்றுவிட்டு, இரவு சுங்குவார்சத்திரத்தில் இருந்து தக்கோலம் நோக்கி ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர்.
மப்பேடு அடுத்த புதுப்பட்டு பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதி ஒரு வழிச்சாலையாக மாற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுனர் தடுப்பு வேலி இருப்பது தெரியாமல் அதிவேகத்தில் ஆட்டோவை செலுத்திய போது சாலையின் தடுப்பு மீது சக்கரம் ஏறி இறங்கியதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார்.
அப்போது ஆட்டோ மறு திசையில் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது. அதில் ஆட்டோவில் பயணம் செய்த 5 பெண்களில் தக்கோலம் பகுதியைச் சேர்ந்த சிவகாமி(45), தேவி(38), இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
மேலும் கஜலட்சுமி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், கலைவாணி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும், பூங்கொடி, ஆட்டோ ஒட்டுனர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், மனோகரன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் இருசக்கர வாகன இயக்கி வந்த நபர் உட்பட 6 பேரும் வெவ்வேறு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாலையின் நடுவே தடுப்புகளில் அமைக்கப்பட்ட இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாததாலும் மற்றும் தடுப்பு வழி அமைக்கப்பட்ட இடத்தில் ஒளிரும் பட்டைகள் (ரிஃப்ளெக்டர்) வைக்காததே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.