கிராமத்திற்குள் புகுந்து 2 காட்டு யானைகள் அட்டகாசம்! விரட்டியடிப்பு! - தர்மபுரி செய்திகள்
Published : Dec 2, 2023, 5:26 PM IST
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சுற்றி உள்ள பகுதிகள் அனைத்தும் அடர்ந்த மலைகள் சூழ்ந்த வனப் பகுதியாக உள்ளன. இதில் யானைகள், மயில்கள், காட்டுப்பன்றிகள், குரங்குகள், மான்கள் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் வன விலங்குகளுக்கு காட்டிற்குள் போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததால் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையை ஒட்டி உள்ள கிராமப் பகுதிக்குள் புகுந்து வருவது மட்டுமல்லாமல், விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள பயிர்களைச் சேதப்படுத்தியும், பொது மக்களைத் தாக்குவதும் தொடர்கதையாக வருகிறது.
இந்நிலையில் பழையூர் அருகே உள்ள வெள்ளமண்காடு பகுதியில் திடீரென 2 காட்டு யானைகள் கிராமப்பகுதிக்குள் புகுந்து விவசாய விளைநிலத்தில் பயிரிட்டுள்ள பயிர்களைச் சேதப்படுத்தி வந்துள்ளது. இதனைக் கண்ட விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை அருகே உள்ள வனப்பகுதிக்கு விரட்டினர். திடீரென்று யானைகள் வனப்பகுதியை விட்டு கிராமப்பகுதிக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.