குடியாத்தம் அருகே இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய பலே திருடன்! - வேலூர் மாவட்ட செய்திகள்
Published : Oct 21, 2023, 11:14 AM IST
வேலூர்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் நித்தின் என்பவர், மரம் அறுக்கும் டிப்போவில் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் இரவு வேலையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து, வீட்டின் முன்பு தனது வாகனத்தை நிறுத்தி வைத்திருந்து உள்ளார்.
இதனையடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். பின்னர் வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, மூன்று மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வருவதும், அதில் ஒருவர் நித்தின் என்பவருடைய இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வதும் பதிவாகி இருந்துள்ளது.
உடனடியாக குடியாத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நித்தின் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம், கண்ணிமைக்கும் நேரத்தில் திருடு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.