சாலையில் சென்ற பெண்ணை வழிமறித்து நகை பறிப்பு.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி! - அனிதா
வேலூர்: குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணை வழிமறித்து, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் 2.5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்றனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அனிதா அளித்த புகாரின் அடிப்படையில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில், குடியாத்தம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தியின் வழிகாட்டுதலின் படி, நகர காவல் ஆய்வாளர் இலட்சுமி வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளை தேடிவந்தார்.
இந்த வழக்கில் செதுவாலையை அடுத்த பொய்கை பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், குடியாத்தம் நகர உதவி காவல் ஆய்வாளர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் இருவரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், குற்ற செயலில் ஈடுபட்டது பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த நெடுஞ்செழியன் என்பவரது மகன்கள் நிரஞ்சன், நிதீஷ் குமார் என்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து சகோதரர்களாகிய இருவரிடம் இருந்து, சுமார் 4 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புடைய 9.5 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.