யானை தாக்கியதில் இருவர் அடுத்தடுத்து உயிரிழப்பு! - elephant attacking videos
ஈரோடுமாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இதனிடையே இந்த வனப்பகுதி சாலை வழியாக வாகனங்களில் செல்வோரை, காட்டு யானைகள் தாக்கும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் பெரியகுன்றி மலை கிராமத்தைச் சேர்ந்த பொம்மே கவுடர் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் பெரியகுன்றியில் இருந்து மாக்கம்பாளையம் வனச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த காட்டு யானை, இருசக்கர வாகனத்தில் சென்ற பொம்மே கவுடரை கண்டதும் ஆக்ரோஷத்தில் அதிவேகமாக துரத்தி உள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பொம்மே கவுடர் தப்பியோட முயற்சித்துள்ளார். இருப்பினும், காட்டு யானை அவரை கொடூரமாக தாக்கி உள்ளது. அதேநேரம் அந்த வழியே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த குன்றி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கூராஜன் என்பவரையும் காட்டு யானை பலமாக தாக்கி உள்ளது.
யானையின் இந்த கொடூர தாக்குதலில் இருவரும் அடுத்தடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கடம்பூர் வனத்துறையினர் மற்றும் கடம்பூர் காவல் துறையினர், உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக கடம்பூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.