மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு.. தூத்துக்குடியில் மாதர் சங்கம் போராட்டம்! - எம் பி பிரிஜ் பூஷன் சிங்
தூத்துக்குடி:இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜகவைச் சேர்ந்தவருமான நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சிங் சில வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்தார் எனவும், அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி கடந்த ஜனவரி மாதம் முதல் சாக்சி மாலிக், தினேஷ் போகத், சங்கீதா போகத், பஜ்ரங் புனியா உட்படப் பல மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் ஒலிம்பிக் போட்டி, உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் ஆவார்கள். இவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 35 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில் இவர்களை, டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாகக் கடந்த ஞாயிறு கிழமையன்று வெளியேற்றி கைது செய்தது.
இதனைக் கண்டிக்கும் விதமாகவும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோட்டில் உள்ள தூத்துக்குடி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமையில், 30க்கும் மேற்பட்டோர் தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அதற்கு முன்னதாக, போராட்டக்காரர்கள் வெயிலின் தாக்கத்தால் தபால் அலுவலகத்தின் உள்ளே நிழற்பகுதியில் நின்று கொண்டிருந்த போது போலீசார் போராட்டக்கார பெண்மணிகளை வெளியே போகுமாறு கூறிய போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.