"தூத்துக்குடி விமான நிலையத்தின் ரன்வே பணிகள் 80% முடிவடைந்துவிட்டது" - மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தகவல்
தூத்துக்குடி:இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்றது. இந்திய தொழில் கூட்டமைப்பின் தூத்துக்குடி தலைவர் வெயிலா கே.ராஜா, இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் சுதீர் குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இநோவேஷன் கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் சிவராஜு இணைய தளம் வாயிலாக கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்த அளவிற்கு அதிகப்படியான தொழில் முனைவோர்கள் தொழில் செய்பவர்கள் அதிகமாக இருக்கின்ற இடம். தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்தக்கூடிய மாவட்டமாகும்.
மேலும், பர்னிச்சர் பார்க் ஐஎஸ்ஆர்ஒ (ISRO) ராக்கெட் ஏவுதளம் வருகின்றது. தூத்துக்குடி விமான நிலையத்தை பொருத்தமட்டில் ஏற்கனவே 600 ஏக்கர் இடம் 2019ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இன்னும் அதிகமாக 106 ஏக்கர் இடம் கேட்டுள்ளனர். அதற்குண்டான நில எடுப்பும் முழுவதுமாக எடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையம் ரன்வே 1.2 கிலோமீட்டரில் இருந்து 3.1 கிலோ மீட்டர் அதிகப்படுத்தும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தப் பணி 80% முடிந்துவிட்டதாக கூட விமான நிலைய இயக்குநர் கூறியுள்ளார். அதேபோல், இரவு விமானம் வந்து செல்லும் வகையில் வல்லநாட்டில் மின்விளக்கு வைக்கப்பட உள்ளது. இதன் பணிகளும் 4 மாதங்களில் முடிவடைந்து விமானம் பயணிகளின் சேவைக்கு வந்துவிடும்” எனக் கூறினார்.