Toll Gate fees hike: தருமபுரி பாளையம் சுங்கச்சாவடி முன்பு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்! - தர்மபுரி மாவட்டச் செய்திகள்
தருமபுரி: சுங்கச்சாவடிகளில் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டண உயர்வைக் கண்டித்து தருமபுரி பாளையம் சுங்கச்சாவடி முன்பு லாரி உரிமையாளர்கள் போராட்டம்.
தமிழகம் முழுவதும் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 26 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று நள்ளிரவு முதல் 26 சுங்கச்சாவடிகளில் ஐந்து முதல் 15 சதவீத கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் அனைத்து சுங்கச்சாவடி முன்பும் மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தருமபுரி அருகே உள்ள பாளையம் சுங்கச்சாவடி முன்பு லாரி உரிமையாளர் சங்க துணைத்தலைவர் நாட்டான் மாது தலைமையில் ஒன்று திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கட்டண உயர்வைக் கண்டித்தும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும், முழக்கங்களை எழுப்பினர்.மேலும் கட்டண உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.