சிலிண்டர் லாரியில் பயங்கர தீ விபத்து... விண்ணை நோக்கி தூக்கி வீசப்பட்ட சிலிண்டர்கள்! - உத்தரகாண்ட் சிலிண்டர் ஏற்றிய லாரியில் தீ விபத்து
தெஹ்ரி :உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரியில் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின.
தெஹ்ரி மாவட்டத்தில் உள்ள கண்டிகால் மகர்ஸ் அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிலிண்டர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பயங்கர வெடி சத்தத்துடன் கேஸ் சிலிண்டர்கள் வெகுதூரம் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தீயை அணைக்க அப்பகுதி மக்கள் பெரும் முயற்சி மேற்கொண்ட போதும் அவர்களால் அணைக்க முடியாத அளவுக்கு தீ கடுமையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பப்பட்ட லாரி முழுவதும் தீப்பிடித்து சாம்பலானது. விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் கிளினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த லாரி எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு கன்சாலி நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.