உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற திருச்சியில் சிறப்பு வழிபாடு! - special worship for World Cup
Published : Nov 19, 2023, 11:53 AM IST
திருச்சி: 13 வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி, நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து, லீக் மற்றும் அரையிறுதி நாக் அவுட் சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்தியா-ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதிப் போட்டியானது இன்று (நவ.19) அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதனால் அகமதாபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் மிகவும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், திருச்சி கருமண்டபம் அருகே, பொன் நகர் காமராஜபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் திருக்கோயிலில், கிரிக்கெட் ஆர்வலர்கள் 15க்கும் மேற்பட்டோர், இந்தியா-ஆஸ்திரேலியா உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என, இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடைய பதாகைகளை ஏந்தி சிறப்பு வழிபாடு நடத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மேலும், இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என இந்தியா முழுவதிலும் உள்ள இளைஞர்கள், பெண்கள் என பலர், முகத்தில் இந்திய தேசிய கொடி வர்ணங்கள் பூசி, தங்களது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.