Srirangam: ஶ்ரீரங்கம் கோயிலில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு புறப்பட்ட வஸ்திர மரியாதை! - Tirupati Sri Venkatamudayan
திருச்சி:திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து திருப்பதி ஸ்ரீ வேங்கடமுடையானுக்கு வஸ்திர மரியாதை புறப்பட்டது. கோவில் இணைஆணையர் சிவராம் குமார், தலைமையில் பட்டாச்சாரியார்கள் அடங்கிய குழுவினர் எடுத்துச்சென்றனர்.
13ஆம் நூற்றாண்டில் அதாவது முகமதியர் படையெடுப்பு காலகட்டத்தின்போது, 1320ஆம் வருடத்திலிருந்து 1360 ஆம் வருடம் வரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலய உற்சவரான, நம்பெருமாள் 40 ஆண்டுகள் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் வைத்து காப்பாற்றப்பட்டார் என்று நம்பப்படுகிரது.
இதனை நினைவுகூரும் வகையில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து; ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி மூலவர் ஸ்ரீவேங்கடமுடையானுக்கு மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் முதலாம் நாள் வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருவது வழக்கம்.
அதன்படி நேற்று மாலை(ஜூலை 15) வஸ்திரமரியாதை திருப்பதிக்கு புறப்பட்டுச்சென்றது. இந்த வஸ்திரங்கள் யாவும் திங்கள் கிழமை (ஜூலை 17) அன்று காலையில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, திருப்பதி ஸ்ரீவேங்கடமுடையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
இந்நிலையில் ஸ்ரீவேங்கடமுடையான், ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் ஸ்ரீபத்மாவதி தாயார், ஸ்ரீதேவி தாயாருக்கு மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பட்டுப் புடவைகள், மாலை மற்றும் மங்களப் பொருட்கள் யாவும் கோவில் ரெங்க விலாச மண்டபத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க, கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து, உள் பிரகாரங்களில் சுற்றி ஊர்வலமாக இன்று எடுத்து வரப்பட்டது.
பின்னர் இதனை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தலைமையில் பட்டாச்சார்யார் மற்றும் கோவில் நிர்வாகிகள் அறநிலையத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கொண்டுசென்றனர்.
நாளைய தினம் காலை திருப்பதி திருமலையில் உள்ள ஜீயர் மடத்து மண்டபத்திலிருந்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, திருப்பதி ஸ்ரீவேங்கடமுடையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் ஸ்ரீரங்கம் வஸ்திர மரியாதையை அணிந்து கொண்டு, அவர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்த வஸ்திர மரியாதை நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.