வழி தவறி ஊருக்குள் வந்த குட்டியானை: உணவளித்த பழங்குடியின மக்களின் நெகிழ்ச்சி வீடியோ! - small elephant
கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே அமைந்துள்ளது பாலூர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது. மேலும் யானைகள் வலசை பாதையின் முக்கிய இடமாகவும் இந்த பகுதி உள்ளது. இதன் காரணமாக ஆனைகட்டி, புதூர், பாலூர் பகுதிகளில் காட்டு யனைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.
பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதி உள்ளதால், கேரள வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிக்கு புதன்கிழமை இரவு 10-க்கும் மேற்பட்ட யானை கூட்டம் வந்துள்ளது. அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்து வழி தவறிய ஒரு மாதமே ஆன பெண் குட்டி யானை பாலூர் கிராமத்திற்குள் புகுந்தது.
இதனையடுத்து அங்கிருந்த பழங்குடியின மக்கள் குட்டி யானையை மீட்டு அதற்கு உணவு அளித்தனர். மேலும் இது தொடர்பாக அகழி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் உடனடியாக அங்கு வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, நேற்று முழுவதும் அதன் தாய் யானையை தேடி வந்த வனத்துறையினர் இரவு நேரமானதால் அதனை அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று உணவளித்து பராமரித்து வருகின்றனர்.
இன்று மீண்டும் அதனை தாய் யானையுடன் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து வருகின்றன. மேலும் கூட்டம் கூட்டமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வருவதால், இந்த குட்டி யானை எந்த கூட்டத்துடன் வந்துள்ளது என்பதை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.