"துன்பம் வரும் வேளையிலே சிரிங்க" - சிவாஜியின் பாடலை பாடி அசத்தும் 2ஆம் வகுப்பு மாணவன்! - வைரல் வீடியோ
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியாக 19 செட்டில்மென்ட்கள் உள்ளது. இதில் மலசர், மலமலசர், காடஸ், முதுவன், இருளர் என மலைவாழ் மக்கள் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களிலும், வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், இவர்களது குழந்தைகள் அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதையடுத்து நெடுங்குன்றம் செட்டில்மென்ட் பகுதியில் 65 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், ராமச்சந்திரன் - யோக மலர் தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.
இதில் முதல் குழந்தை ராகுல் அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 2ஆம் வகுப்பில் படித்து வருகிறார். தனது தந்தை ராமச்சந்திரன் அடிக்கடி சிவாஜி பாட்டு பாடுவதால் சிறுவன் ராகுலும் சிவாஜி பாட்டுகள் பாடி பழகி உள்ளார். இதனால் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் நடித்த ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் வரும் 'ஜின்ஜினுக்கா சின்னக்கிளி' என்ற பாடலை ராகுல் பாடி உள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.