நீலகிரியில் கொட்டித் தீர்த்த கனமழை - குன்னூர் நெடுஞ்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு! - நீலகிரி மழை பொழிவு
நீலகிரி : குன்னூர் - மேட்டுப்பாளையம் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் மொத்தமாக 679 மில்லி மீட்டர் மழைப் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சராசரியாக 23.41 மில்லி மீட்டர் மழைப் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக பாலகொலா பகுதியில் 69 மில்லி மீட்டரும், குன்னூரில் 68 மில்லி மீட்டரும் மழைப் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மழையின் காரணமாக, குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் குரும்பாடி அருகே ராட்சத மரம் சாலையில் விழுந்தது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி உதவியுடன் மரங்களை தீயணைப்புத் துறையினர் வெட்டி அகற்றினர். இதன் காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் ஏறத்தாழ 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.