வீடு வழங்க கோரி திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்! மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒப்பாரி!
திருவண்ணாமலை: திருநங்கைகள் வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் தரையில் அமர்ந்தும், ஒப்பாரி வைத்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், தண்டராம்பட்டு, ஆரணி, செங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 350 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். அவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழக அரசிடமும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால், மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், திருநங்கைகள் இன்று (ஆகஸ்ட் 21) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் தரையில் அமர்ந்து தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தமிழகத்தில் 37 மாவட்டங்களில் வசித்து வரும் திருநங்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் வீடு கட்டி வழங்கி உள்ளது. ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வரும் தங்களுக்கு வீடு வழங்க மாவட்ட நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தங்களுக்கு உடனடியாக வீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனர்.